Pages

27 Mar 2012

தனுஷின் ’3′ படம் ஒரு ஏரியா மட்டுமே ரூ.3 கோடிக்கு விற்பனை



தனுஷ் எதிர்ப்பார்க்காத அளவுக்கு 3 படம் அவருக்கு புகழையும் பணத்தையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வைக்கிறது. மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கொலை வெறி’ பாடல் மூலம் அவருக்கு உலக புகழ் கிடைத்தது. நாடு முழுவதும் விருந்துகள், விழாக்கள், பிரதமர் வீட்டில் விருந்து என இந்தப் பாடலால் தனுஷ் பெற்றது ஏராளம். இந்திப் பட வாய்ப்புகளும் வந்துள்ளன அவருக்கு.
கொலை வெறி பாடல், `3′ படத்தின் வியாபார அந்தஸ்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு பிரபல வினியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். இவரிடமிருந்து நிஜாம் ஏரியாவின் வினியோக உரிமையை மட்டும் ரூ.3 கோடிக்கு வாங்கியிருக்கிறார், இன்னொரு வினியோகஸ்தர்.
ஆந்திராவில் மொத்தம் 9 வினியோக ஏரியாக்கள் உள்ளன. ஆக, `3′ படம், ஆந்திராவில் மட்டும் குறைந்த பட்சம் ரூ.10 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர வேறு எந்த தமிழ் நடிகரின் படத்துக்கும் இந்த விலை அங்கு கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சைபீரியாவில் விண்ணிலிருந்து விழுந்த 200 கிலோ எடையுடைய மர்ம பொருள்


சைபீரியாவில் விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சைபீரியாவில் உள்ள ஓட்ராட்நெஸ்கி என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டு பகுதியில் விண்ணில் இருந்து திடீரென மர்ம பொருள் சமீபத்தில் விழுந்தது.
அதை பகுதியில் இருந்த கிராமவாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் யு வடிவத்தில் இருந்த அந்த பொருள் ஏதோ ஒரு சாதனத்தின் உடைந்த பொருள் என்பதை அறிந்தனர். இதுகுறித்து ரஷ்ய ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் அளித்தனர்.
வெள்ளியை போல் பளபளப்பாக உள்ள அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், விண்ணில் இருந்து விழுந்த பொருள் 200 கிலோ எடை உள்ளது. உலோகத்தால் ஆனது. செயற்கைகோள், ஏவுகணை அல்லது விண்கல்லாக இருக்க வாய்ப்பில்லை என்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மர்ம பொருள் குறித்த தொடர் ஆய்வு நடைபெறுகிறது என்றனர்.