புதிதாக என்ன புத்தகம் படிக்கலாம் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் தளங்களில் புதிய வரவாக Mind The Book தளம் அறிமுகமாகியுள்ளது. மற்ற தளங்களில் இருந்து மாறுபட்டு புதுமையான முறையில் இந்த தளம் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த தளம் நீங்கள் அடுத்ததாக படிக்க கூடிய புத்தகத்தை பரிந்துரை செய்கிறது.பெரும்பாலான புத்தக் பரிந்துரை தளங்கள்,ஒருவர் படிக்கும் புத்தக வகையை வைத்து அவருக்கு பிடிக்க கூடிய புத்தகத்தை முன் வைக்கின்றன. இந்த தளமோ எந்த புத்தகம் தேவை என்று கேள்வி கேட்க சொல்கிறது. அந்த கேள்விக்கு விடை அளிக்கும் புத்தகத்தை பரிந்துரைக்கிறது. உதாரணத்திற்கு ஒருவர் தன்னம்பிக்கை தரக்கூடிய புத்தகத்தை படிக்க விரும்பலாம், இன்னொருவர் செல்வந்தாராக வழிகாட்டக்கூடிய புத்தகத்தை தேடலாம்.
இப்படி புத்தகங்கள் விடை அளிக்க கூடிய கேள்விகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம். இதை தான் எல்லா புத்தகமும் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கிறது என்று Mind The Book தளம் குறிப்பிடுகிறது.
அடுத்ததாக என்ன புத்தகம் படிப்பது என்னும் கேள்விக்கு ஆலோசனை பெற விரும்பும் வாசகர் இந்த தளத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் புத்தகத்திற்கான கேள்வியை கேட்டால் அதற்கான புத்தகத்தை இந்த தளம் பரிந்துரைக்கிறது.
விஞ்ஞானியாவது எப்படி என்பதில் துவங்கி நல்ல படங்களை ரசிப்பது எப்படி (சினிமா ரசனை என்னும் தலைப்பில் அம்ஷன் குமார் அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார்)என்பது வரை எந்த கேள்வியை வேண்டுமானாலும் புத்தக பிரியர்கள் கேட்கலாம்.
சமீபத்தில் கேட்கப்ட்ட கேள்விகள், பிரபலமான புத்தக கேள்விகள் என தனித் தனி தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பதில் அளிக்கப்படாத கேள்விகளுக்கும் ஒரு பட்டியல் இருக்கிறது.
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்ககூடிய பல புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கூடவே அந்த புத்தகம் அவற்றுக்கான கேள்விக்கு பதில் தருகின்றனவா என்று வாச்கர்கள் கருத்து தெரிவிக்கும் வசதியும் உள்ளது. தங்களுக்கு தெரிந்த பொருத்தமான புத்தகத்தையும் பரிந்திரைக்கலாம்.
சரியான புத்தகத்தை அடையாளம் காட்டுவதோடு இந்த தளம் தனது சேவையை நிறுத்தி கொள்கிறது. அந்த புத்தகம் அப்படி இப்படி என்னும் அறிமுக குறிப்புகளோ, விமர்சன குறிப்புகளோ இல்லை. புத்தகத்தை பார்த்து விட்டு நேரடியாக அமேசானில் வாங்கி கொள்ளலாம். அவ்வளவு தான். இந்த எளிமை தான் இதன் பலமும் கூட.
தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதிய புத்தகங்கள் வெளியாகி வாசகர்களை புத்தக கடலில் திக்கு முக்காட வைக்கும் நிலையில் என்ன புத்தகத்தை படிக்கலாம் என்னும் கேள்விக்கு best seller பட்டியல், விமர்சன் குறிப்புகள், பரிந்துரைகள் ஆகியவற்றை எல்லாம் விட இது சிறந்த வழியாக இருக்கும் அல்லது அவற்றோடு இதுவும் ஒரு ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
இணையதள முகவரி - http://www.mindthebook.com/