உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான, தகவல்கள் கூறப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர்தினக் கதைகள் தியாகம் நிறைந்தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலத் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது.
சீனர்களின் காதலர் தினம்
சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டேவான்பாபியா’ என்று அழைக்கின்றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்றனர். நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவது சிறப்பம்சம்.